மத்தியில் ஆட்சி மாற்றம்: கனிமொழி எம்.பி., 'லக லக'
மத்தியில் ஆட்சி மாற்றம்: கனிமொழி எம்.பி., 'லக லக'
ADDED : ஜூன் 19, 2024 04:55 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற எம்.பி., கனிமொழி, கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட மகளிருக்கு பரிசீலனை செய்து வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். விரைவில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். வேலை வாய்ப்பு, குடிநீர் பிரச்னை உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும், வேலை நாட்கள் அதிகரிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி வந்துவிட்டது. ஆகையால் வாக்குறுதி நிறைவேற்ற முடியவில்லை.
ஒவ்வோர் ஆண்டும் 100 நாள் வேலை செய்ததற்கான நிதியை மத்திய அரசு குறைத்து வருவதால், சரியாக வேலையும், ஊதியமும் கொடுக்க முடியவில்லை. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.