ADDED : ஜூலை 06, 2024 02:52 AM
சென்னை,:கவர்ச்சி திட்டங்கள் வாயிலாக, பொதுமக்களிடம், 95,000 கோடி ரூபாய் வரை பெற்று, மோசடி செய்த, 'எச்பிஎன் டெய்ரீஸ்' நிறுவனம் மீது, திருச்சி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
டில்லியில், 'எச்பிஎன் டெய்ரீஸ் அண்டு அலைடு' என்ற பால் பொருள் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வந்தது. பின், நிதி நிறுவனமாக செயல்பட துவங்கியது. இந்நிறுவனம், 2010 - 2015ம் ஆண்டு வரை, முதலீட்டாளர்களுக்கு, '18 சதவீத வட்டி தரப்படும்; ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 25,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் வழங்கப்படும்' என்பது போன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, 95,000 கோடி ரூபாய் வரை பெற்று, மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தில், திருச்சியை தலைமையிடமாக வைத்து இந்நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும், 9.21 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 'எச்பிஎன் டெய்ரீஸ் அண்டு அலைடு' நிறுவன நிர்வாக இயக்குனர் அமன்தீப்சிங் சரண், ஹர்மந்தர் சிங் சரண் உட்பட, 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில், அமன்தீப்சிங் சரண், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் போலீசாரிடம் மோசடி வழக்கில் கைதாகி, அங்குள்ள சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அமன்தீப் சிங் சரண் உள்ளிட்டோர் மீது, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில், முதற்கட்ட விசாரணை குறித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 'மோசடி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருப்பின், அசல் ஆவணங்களுடன், திருச்சி மன்னார்புரம் பகுதியில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு, நேரடியாக சென்று புகார் அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 0431 - 2422020 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம்' என, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.