ADDED : ஜூன் 25, 2024 01:48 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: போலி முகவரி சான்றிதழ் கொடுத்து சிம் கார்டு வாங்கிய வழக்கில் கைதான கேரள மாவோயிஸ்ட்டுகள் ஷைனி, அனுப் மேத்யூ ஜார்ஜ் மீது ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு (பிரேமிங் ஆப் சார்ஜ்)செய்யப்பட்டது.
2016ல் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கணேசனின் அடையாள அட்டை ஜெராக்ஸ் நகலை போலி முகவரி சான்றாக கொடுத்து சிம் கார்டு வாங்கியதாக கேரளாவை சேர்ந்த ஷைனி, அனுப் மேத்யூ ஜார்ஜ் மீது சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விருதுநகர் மாவட்ட க்யூபிராஞ்சுக்கு மாற்றப்பட்டது.
இருவரும் கைதாகி சிறையில் இருந்த நிலையில் தற்போது ஷைனி ஜாமினில் உள்ளார். அனுப் மேத்யூ ஜார்ஜ் கோவை மத்திய சிறையில் உள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கு விசாரணை நடக்கிறது.
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. மதியம் 12:30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேத்யூ ஜார்ஜை போலீசார் அழைத்து வந்தனர். ஷைனியும் ஆஜரானார். இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையை ஜூலை 10க்கு ஒத்தி வைத்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.