ADDED : மே 10, 2024 11:59 PM
சென்னை:காரில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக, சென்னையில் உள்ள, 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில், தேனி மாவட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னையைச் சேர்ந்த பிரபல யு டியூபர் சவுக்கு சங்கர்; பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதுாறாக பேசியது உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பராமரிப்பு டெண்டர் தொடர்பாக, போலி ஆவணங்கள் தயாரித்து வெளியிட்டதாக, மேலும் ஒரு வழக்கு பதிந்துள்ளனர்.
அவர் தேனியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த போது, சங்கரின் காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, காரில் 400 கிராம் கஞ்சா சிக்கியது.
இது தொடர்பாக, தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.இந்த வழக்கிலும் சங்கர் கைதாகி உள்ளார்.
கஞ்சா வழக்கு தொடர்பாக, சென்னை தி. நகரில் உள்ள சங்கரின் அலுவலகம் மற்றும் மதுரவாயலில் உள்ள வீட்டில், நேற்று தேனி மாவட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சங்கர் நேற்று மாலை 7:30 மணியளவில் கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்துள்ள மூன்று வழக்குகளில், முறைப்படி அவர் கைது செய்யப்பட்டார்.