சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து: வக்கீல் குற்றச்சாட்டு
சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து: வக்கீல் குற்றச்சாட்டு
ADDED : மே 06, 2024 11:50 PM

கோவை : கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வக்கீல் குற்றஞ்சாட்டினார்.
பிரபல யு டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதுாறான கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் சந்தித்த அவரது வக்கீல் கோபாலகிருஷ்ணன் கோர்ட் வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சவுக்கு சங்கர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பும், சிறையில் அடைப்பதற்கு முன்பும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவரது உடலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட சிறை போலீசார் பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் தெரிவித்தார்.
வக்கீல்கள் குழு சவுக்கு சங்கரை சந்திக்காமல் இருந்திருந்தால், அவர் வழுக்கி விழுந்ததாகவோ அல்லது வேறு விதமாகவோ சிறை துறையினர் அறிக்கை வெளியிட்டிருப்பர். முழு உடல் தகுதியுடன் உள்ள சவுக்கு சங்கரை சிறை வளாகத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப் பிரிவில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கடலுார் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டு இருந்த போது, அங்கு சிறை எஸ்.பி.,யாக இருந்த செந்தில்குமார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது சவுக்கு சங்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தற்போது அதே செந்தில்குமார் கோவையில் உள்ள நிலையில், திட்டமிட்டே சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.
மேலும், சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், சவுக்கு சங்கரை, நீதிபதி நேரில் பார்க்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.