சென்னை - குமரி இரட்டை ரயில் பாதை பணி நிறைவு: பயண நேரம் குறையும்
சென்னை - குமரி இரட்டை ரயில் பாதை பணி நிறைவு: பயண நேரம் குறையும்
ADDED : ஏப் 06, 2024 04:32 AM

சென்னை: பல ஆண்டுகளாக நடந்து வந்த சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்து, இறுதிக்கட்ட சோதனை நடந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் போது, தென்மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம், 45 நிமிடங்கள் வரை குறையும். கூடுதல் ரயில்களையும் இயக்க முடியும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிரதானமான ரயில்வே கனவு திட்டமான, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம் 1998ல் துவங்கி, 2021ல் மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, மதுரை - திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகளை, 2022 மார்ச்சில் முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என பல்வேறு காரணங்களால், இந்த திட்டப்பணிகள் தாமதமாகின.
இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் முழு வேகம் பெற்றன.
திருநெல்வேலி - நாகர்கோவில் இடையிலான பணிகள் முடிந்த நிலையில், தற்போது, நாகர்கோவில் - கன்னியாகுமரி வரையிலான இரட்டை பாதை பணிகளும் முடிந்து, இறுதிகட்ட சோதனை பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தில், தற்போது கன்னியாகுமரி வரை பணிகள் முடிந்துள்ளன. அதிவேக ரயிலை இயக்கி சோதனை ஓட்டமும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களை, படிப்படியாக இரட்டை பாதைகளில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் பயண நேரம் 45 நிமிடங்கள் வரை குறையும். ரயில்களின் வேகத்தையும், 130 கி.மீ., வரை அதிகரிக்க முடியும்.
மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆறு சர்வீஸ் ரயில்கள் வரை அதிகரிக்கவும் முடியும்.
இவ்வாறு கூறினர்.

