ADDED : ஏப் 14, 2024 06:12 AM

சென்னை : சென்னை - மொரீஷியஸ் விமான சேவை, நான்கு ஆண்டுகளுக்குப் பின் நேற்று முதல் மீண்டும் துவங்கி உள்ளது.
சென்னை - மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை, 2020 பிப்., வரை வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த சேவை நிறுத்தப்பட்டது. இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னும், இந்த விமான சேவை மீண்டும் துவங்கப்படவில்லை.
இதனால், உயர்கல்வி பெறச் செல்லும் மாணவர்கள், சுற்றுலா பயணியர் சென்னையில் இருந்து, டில்லி, மும்பை, துபாய் சென்று அங்கிருந்து, இணைப்பு விமானங்கள் வாயிலாக, மொரீஷியஸ் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
பயணியரின் கோரிக்கையை ஏற்று, தற்போது சென்னை - மொரீஷியஸ் விமான சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்தில் சனிக்கிழமை மட்டும் இந்த விமானம் இயக்கப்படும். முதல் விமானம் நேற்று அதிகாலை இயக்கப்பட்டது.
மொரீஷியஸ் நாட்டின் போர்ட் லுாயிஸ் விமான நிலையத்தில் இருந்து, 245 பயணியருடன் புறப்பட்ட ஏர் மொரீஷியஸ் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு 1:50 மணிக்கு சென்னை வந்தது.
அதில் வந்த பயணியரை, சென்னை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். அந்த விமானம் நேற்று அதிகாலை 3:35 மணிக்கு, மொரீஷியஸ் நாட்டின் போர்ட் லுாயிஸ் விமான நிலையத்திற்கு, 173 பயணியருடன் சென்றது.
பயண நேரம், 5 மணி 45 நிமிடங்கள். கட்டணம், 26,406 ரூபாய். பயணியரின் வரவேற்பைப் பொறுத்து, கூடுதல் விமான சேவை இயக்கப்படும் என, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

