சென்னை டூ- வாலாஜா சோதனை ஓட்டம்: 110 கி.மீ., வேகத்தில் ஓடிய 'வந்தே மெட்ரோ!'
சென்னை டூ- வாலாஜா சோதனை ஓட்டம்: 110 கி.மீ., வேகத்தில் ஓடிய 'வந்தே மெட்ரோ!'
ADDED : ஆக 04, 2024 06:01 AM

சென்னை: சென்னை கடற்கரை --- வாலாஜா இடையே, முதல், 'வந்தே மெட்ரோ' ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. காட்பாடி வரை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிவுறுத்தலின்படி, வாலாஜா வரை இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., ஆலையில், 'வந்தே மெட்ரோ' ரயில் தயாரிக்கும் பணி கடந்த மாதம் முடிந்தது. இந்த ரயில், 150 கி.மீ., முதல் 200 கி.மீ., துாரம் வரை உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக தயாரிக்கப்பட்டது.
12 பெட்டிகள் உடைய இந்த ரயிலில், 'ஏசி' வசதி, பயணியரை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற வசதிகள் உள்ளன. கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்டவையும் உண்டு.
சென்னை கடற்கரை -- காட்பாடி இடையே, இந்த ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ரோடு இடையே மட்டும், நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த ரயில் வில்லிவாக்கத்தில் இருந்து, நேற்று காலை 8:15க்கு புறப்பட்டு, காலை 9:00 மணிக்கு சென்னை கடற்கரையை அடைந்தது. அங்கிருந்து காலை 9:30 மணிக்கு புறப்பட்டு, வில்லிவாக்கத்தை காலை 10:00 மணிக்கு அடைந்தது.
அங்கு இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமார் கார்க், ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு உயரதிகாரிகள், ஐ.சி.எப்., அதிகாரிகள் உள்பட, 30க்கும் மேற்பட்டோர் ஏறினர்.
பின், வில்லிவாக்கத்தில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் வழியாக வாலாஜா சாலையை அடைந்தது. அங்கிருந்து வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்டது. மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
வில்லிவாக்கம் -- வாலாஜா சாலை இடையே, இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. வந்தே மெட்ரோ ரயிலின் வேகம், சிக்னல் தொழில்நுட்பம், நடைமேடைகளில் சரியாக நிற்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ரயிலை எந்த வழித்தடத்தில் இயக்குவது குறித்து, இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சென்னை - காட்பாடி அல்லது திருப்பதி வழித்தடத்தில் இயக்க வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.