சென்னை பல்கலை தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்கு சிக்கல்
சென்னை பல்கலை தொல்லியல் பட்டம் பெற்றவர்களுக்கு சிக்கல்
ADDED : ஏப் 10, 2024 03:34 AM

சென்னை : தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள, இணையில்லாத கல்வி பட்டியல் குறித்த அரசாணையால், சென்னை பல்கலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை படிப்பை முடித்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் வரையறைக்கு உட்பட்டு, எந்தெந்த படிப்புகள் எந்தெந்த படிப்புகளுக்கு இணையில்லாதவை என்பது குறித்து, பிப்ரவரி மாதம் வல்லுனர் குழு ஆலோசித்தது.
அந்தக்குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதில், தாவரவியல், வரலாற்று துறை படிப்புகளுக்கு இணையில்லாத படிப்புகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.
அதாவது, சென்னை பல்கலையால் வழங்கப்படும் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் எம்.ஏ., பட்டம், எம்.ஏ., வரலாறு பட்டத்துக்கு இணையானது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், வரலாற்றுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு, சென்னை பல்கலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை பல்கலையில், எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டம் பெற்றவர்கள் கூறியதாவது:
தற்போது, ஆசிரியர் தேர்வாணையம் வரலாற்றுத்துறை பேராசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு, சென்னை பல்கலையில் எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டம் பெற்று, பிஎச்.டி., 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளோரும் விண்ணப்பிக்க முடியாத வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய, மாநில தொல்லியல் துறைகளிலும், வரலாறு சார்ந்த கல்வித்துறையிலும், சென்னை பல்கலையில் படித்தோர் தான் அதிகளவில் சாதித்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்துள்ள பல்வேறு அகழாய்வுகளை அவர்களே திறம்பட செய்து, புதிய வரலாற்றுக்கு துணை புரிந்துள்ளனர். அதேபோல், நாணயம், கல்வெட்டு, சுவடிகள் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்து, புதிய வரலாற்றை எழுதி உள்ளனர்.
தொல்லியல் துறை வேலைவாய்ப்புகளுக்கு வரலாற்று துறையினர் விண்ணப்பிக்கும் தகுதி பெற்றுள்ள நிலையில், வரலாற்றுத்துறை வேலைவாய்ப்புக்கு தொல்லியல் துறையினர் விண்ணப்பிக்க முடியாத வகையில், தமிழக அரசு தவறான அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதனால், வரலாறு பாடத்திட்டத்தில் உள்ள பண்டைய வரலாறு, தொல்லியல் குறித்த பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்படுவதுடன், சென்னை பல்கலையில் படித்து அகழாய்வுகளை செய்து, பல வரலாற்று நுால்களை எழுதிய, தகுதியும் திறமையும் உள்ள நுாற்றுக்கணக்கான கல்வியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்.
இது, தொல்லியல் படிப்பை முடித்தோருக்கும், படிப்போருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேசமயம், தஞ்சை தமிழ் பல்கலையில் தொல்லியல் படிப்பை முடித்தவர்கள், வரலாற்றுத் துறை பணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்படவில்லை. இது பாரபட்சமான அரசாணையாக உள்ளது. இதை மாற்றி, பழைய நடைமுறையை தொடர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.