ADDED : மே 04, 2024 12:54 AM

சென்னை:கொடைக்கானலில் ஓய்வெடுக்க சென்ற, முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
லோக்சபா தேர்தல், கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது. தேர்தல் முடிந்தாலும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4 வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, அரசியல் கட்சியினர் கோடை வாசஸ்தலங்களுக்கு, சுற்றுலா சென்று வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக, கடந்த மாதம் 29ம் தேதி கொடைக்கானல் சென்றார்.
அங்கு பாம்பார்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார். பசுமை பள்ளத்தாக்கில் உள்ள மைதானத்தில், 'கோல்ப்' விளையாடினார். முதல்வரின் பயண திட்டத்தில், பேரிஜம் ஏரி, கொடைக்கானல் ஏரி போன்றவற்றில் படகு சவாரி, துாண் பாறை பார்வையிடல் உள்ளிட்ட திட்டங்கள் இருந்தன; கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டன.
இன்று வரை பயணத் திட்டம் இருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக நேற்று மாலை 3:45 மணிக்கு, கொடைக்கானலில் இருந்து காரில் மதுரை சென்றார். மதுரையில் இருந்து தனி விமானத்தில் இரவு 7:00 மணிக்கு புறப்பட்டார். இரவு 7:55 மணிக்கு சென்னை திரும்பினார்.
***