அக்கறை காட்டாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை தாக்கு
அக்கறை காட்டாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை தாக்கு
ADDED : ஜூன் 16, 2024 02:18 PM

சென்னை: தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், முதல்வர் ஸ்டாலின் அக்கறை காட்டவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க., தனது நிர்வாக தோல்விகளை மறைத்து, மக்களுக்கு தேவையே இல்லாத விஷயங்களை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. குஜராத் முதல்வராக இருந்த போதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தின் மீது அதிக மதிப்பு கொண்டவர். ஆனால் அரசியலமைப்பை ஏதோ பிரதமர் இப்போதுதான் நினைவில் கொண்டு வணங்கியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது முரணானது.
அரசியலமைப்பு சட்டம்
பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை தலை வணங்க செய்ததே இந்தியா கூட்டணி தான் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். மோடியின் வாழ்க்கையைப் பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள மரியாதையைப் பற்றியும், தமிழக முதல்வருக்கு நினைவூட்டுவது எனது கடமை. தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி, நாடு முழுவதும் சந்தர்ப்பவாதிகள், வாரிசுகள், ஊழல்வாதிகள் நிறைந்த ஒரு அமைப்பாகும்.
இண்டியா கூட்டணி
லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 13 கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியால், பா.ஜ.,வை நெருங்க முடியவில்லை. போகாத ஊருக்கு வழி தேடுவது என்ற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. அது போன்றதொரு உலகில் முதல்வர் ஸ்டாலின் தனது தார்மீக வெற்றியை வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். புதிய காரணங்களை கூறி விழா கொண்டாடுவதற்கு பதில், தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், முதல்வர் ஸ்டாலின் அக்கறை காட்டவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.