முதல்வரின் செயலர் முருகானந்தம் தலைமை செயலராக பதவியேற்பு
முதல்வரின் செயலர் முருகானந்தம் தலைமை செயலராக பதவியேற்பு
ADDED : ஆக 20, 2024 01:17 AM

சென்னை: தமிழக அரசின், 50வது தலைமைச் செயலராக, சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் நேற்று பதவியேற்றார்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தலைமைச் செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு ஜூனில் ஓய்வு பெற்றார்.
அதன்பின், சிவ்தாஸ் மீனா, புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். அவர் அக்டோபரில் ஓய்வு பெற உள்ள நிலையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, முதல்வரின் செயலராக இருந்த முருகானந்தம், புதிய தலைமைச் செயலராக நேற்று நியமிக்கப்பட்டார்.
இவர் சென்னையைச் சேர்ந்தவர்; 1967 டிசம்பர் 23ல் பிறந்த இவர், கணினி அறிவியல் பிரிவில் இன்ஜினியரிங் படித்துஉள்ளார். ஐ.எம்.எம்., நிறுவனத்தில், எம்.பி.ஏ., படித்துள்ளார். கடந்த 1991ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலியில் சப் - கலெக்டராக பணியை துவக்கினார்.
கடந்த 2001 முதல் 2004 வரை, கோவை கலெக்டராக பணியாற்றினார்.
ஊரக வளர்ச்சித் துறை இணை செயலர், டில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர், தொழில் துறை செயலர், நிதித்துறை செயலர், முதல்வரின் செயலர் என, பல்வேறு பதவிகளை வகித்தவர்.
தற்போது, தமிழக அரசின், 50வது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நேற்று காலை தலைமைச் செயலராக பதவியேற்றார். முன்னதாக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.