சர்ச் சொத்துக்களையும் பதிவு செய்ய வேண்டும்! உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து
சர்ச் சொத்துக்களையும் பதிவு செய்ய வேண்டும்! உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து
ADDED : மே 29, 2024 12:58 AM
மதுரை:''ஹிந்து கோவில் சொத்துக்கள் அறநிலையத்துறை சட்டப்படியும், வக்ப் போர்டு சொத்துக்கள் வக்பு வாரிய சட்டப்படியும் பாதுகாக்கப்படுவது போல, கிறிஸ்துவ சர்ச்களின் சொத்துக்களையும் பதிவுச் சட்டத்தில் சேர்க்க நேரம் வந்து விட்டது,'' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் ஷாலின் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
நான், 2023ல் விஜயா என்பவரிடமிருந்து சொத்து வாங்கினேன். அதை பதிவு செய்ய திருப்பத்துார் சார் - பதிவாளர் மறுத்து விட்டார். இதுதொடர்பாக, 2023 மார்ச் 29ல் சார் - பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நான் வாங்கிய சொத்தை உடனே பத்திரப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இம்மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
திருப்பத்துார் சார் - பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'சென்னை உயர் நீதிமன்றம் 2017-ல் இரு வழக்குகளில், தமிழ் இவாஞ்சலிக்கல் லுாத்தரன் சர்ச் சொத்துக்களை, உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல், பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
'இதுதொடர்பாக பதிவுத்துறை ஐ.ஜி., சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் தான், மனுதாரரின் சொத்துப் பதிவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது.
பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தமிழில், 'சிவன் சொத்து குலம் நாசம்' என்பர். அதாவது, 'கோவில் சொத்துக்களை அபகரித்தால், குடும்பம் அழிந்து விடும்' என்பது அதன் அர்த்தம்.
ஹிந்து, இஸ்லாமிய சட்டப்படியான சொத்துக்களை பதிவுத்துறைச் சட்டம் பாதுகாக்கிறது. அந்த பதிவுத்துறை சட்டத்தில், சர்ச் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
ஹிந்து கோவில் சொத்துக்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்படியும், வக்ப் போர்டு சொத்துக்கள் வக்பு வாரிய சட்டப்படியும் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், கிறிஸ்துவ சர்ச் சொத்துக்களை பொறுத்தவரை, இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு. அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். அதனால், சர்ச் சொத்துக்களை பதிவுத்துறைச் சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும்; அதற்கான நேரம் வந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில், டி.இ.எல்.சி., என்ற, தமிழ் இவாஞ்சலிக்கல் லுாத்தரன் சர்ச் சொத்து தொடர்பான பிரதான வழக்கு, பதிவுத்துறை ஐ.ஜி.,யின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, திரும்ப பெறப்பட்டுள்ளது.
பிரதான மனு நிலுவையில் இல்லாத போது, இடைக்கால உத்தரவுக்கு உயிர் இல்லை.
பதிவுத்துறை ஐ.ஜி.,யின் சுற்றறிக்கை சட்டப்படியான உத்தரவும் இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து, அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார். இதனால், டி.இ.எல்.சி., சொத்துக்களை பொறுத்தவரை, தற்போது எந்த தடையும் இல்லை.
மேலும், சர்ச் சொத்துக்கள் பதிவுத்துறை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படாத நிலையில், அந்த சொத்துக்களை பதிவு செய்ய மறுப்பது சரியல்ல. எனவே, சார் - பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் பத்திரப்பதிவுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.