சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் சாகசம் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் சாகசம் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
ADDED : மார் 08, 2025 12:45 AM

சென்னை:மத்திய தொழில் பாதுகாப்பு படையின், 56வது நிறுவன தினத்தையொட்டி, அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள, 'ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி.,' பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து, பார்வையாளர்களை கவர்ந்தனர்.
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை, முக்கிய வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு, தீயணைப்பு நேரங்களில், சாமர்த்தியமாக செயல்படுவதை, தத்ரூபமாக நிகழ்த்தி காட்டினர். சி.ஐ.எஸ்.எப்., பெண்கள் வாத்திய குழுவினர், வாத்திய கருவிகளை இசைத்தனர். மற்றொரு பெண்கள் குழுவினர், 7 பிரிவுகளாக பிரிந்து, யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.
செயற்கையாக விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைத்து, அதன் உள்ளே நுழையும் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தும் நிகழ்வை, அற்புதமாக செய்து காண்பித்தனர். நாட்டின் முக்கிய வி.ஐ.பி., தன் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட, சி.ஐ.எஸ்.எப்., கமாண்டோக்களுடன் செல்கையில், பயங்கரவாதிகள் காரில் சுற்றி வளைக்க, அவர்களை மடக்கி பிடித்து, பிரமுகரை காப்பாற்றும் நிகழ்ச்சியை நடத்தியது, அனைவரையும் பிரமிக்க வைத்தது. சாகச ஒத்திகை இறுதியில், சி.ஐ.எஸ்.எப்., தீயனைப்பு வீரர்கள், நாட்டின் மூவர்ண தேசிய கொடியை நினைவூட்டும் விதமாக, மூவர்ண நிறத்தில் தண்ணீரை வானில் அடித்து, பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர்.