UPDATED : மே 12, 2024 06:09 AM
ADDED : மே 11, 2024 09:18 PM

சென்னை:கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. அதை, குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப செலுத்தி விட்டால், வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
இதனால், கடன் வழங்கும் போது, விவசாயிதான் என்பதை உறுதி செய்வதற்காக, சிட்டா, அடங்கல் சான்று பெறப்படுகிறது. சில சங்கங்களில், அந்த ஆவணங்கள் இன்றி கடன் வழங்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.
எனவே, 'ஒவ்வொரு முறையும், பயிர்க்கடன் வழங்கும் போது சிட்டா, அடங்கல் சான்று பெற வேண்டும்; குத்தகை நிலமாக இருந்தால், நில உரிமையாளரிடம், 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் அல்லது சுய உறுதிமொழி பத்திரம் அல்லது வி.ஏ.ஓ., சான்று பெற வேண்டும்.
கோவில் நிலமாக இருந்தால், அறநிலையத் துறை செயல் அலுவலரிடம் சான்று பெற வேண்டும்' என, சங்க அதிகாரிகளுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.