சுடுமண் பெண் தலை பொம்மை விஜயகரிசல்குளத்தில் கண்டெடுப்பு
சுடுமண் பெண் தலை பொம்மை விஜயகரிசல்குளத்தில் கண்டெடுப்பு
ADDED : ஜூன் 25, 2024 01:41 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில், மூன்றாம் கட்ட அகழாய்வில் முதற்கட்டமாக மூன்று பள்ளங்கள் தோண்டப்பட்டன.
இதுவரை உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று அகழாய்வில், சுடுமண்ணால் ஆன பெண் தலை பொம்மை கண்டெடுக்கப்பட்டது.
அமைச்சர் தங்கம் தென்னரசு, 'அந்த சுடுமண் பெண் தலை பொம்மை 30.7 மி.மீ., உயரம், 25.6 மி.மீ., அகலமும் கொண்டதாக இருந்தது' என, எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி, “ஏற்கனவே நடந்த இரண்டு கட்ட அகழாய்வுகளில் சிறிய அளவிலான சுடுமண் உருவ பொம்மை கண்டறியப்பட்டது.
“தற்போது பெரிய உருவ பொம்மை கண்டறியப்பட்டுள்ளது. இந்த உருவ பொம்மை குந்தம் என்ற சிகை அலங்காரத்தில் காணப்படுகிறது. முன்னோர்கள் கலைக்கு மட்டும் அல்லாமல் சிகைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என இதிலிருந்து தெரிகிறது,” என்றார்.
அதுபோல, சிவகங்கை மாவட்டம், கீழடி 10ம் கட்ட அகழாய்வில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இப்பகுதியில் குடியிருப்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது என, கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் கூறினர்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சென்னானுார் மலையடிவாரம் அருகே நேற்று 53 செ.மீ., ஆழ அகழாய்வு குழியில், உடைந்த நிலையில் கற்காலக் கருவி கிடைத்துள்ளது. அது, விவசாயக் கருவியாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.