ADDED : ஏப் 08, 2024 06:11 AM

விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி, வி.சாலையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற 'இண்டியா' கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், கடந்த 5ம் தேதி இரவு நடந்தது.
இதற்காக, மாலை 5:00 மணிக்கே கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். மாலை 5 மணி முதல், பிரசார கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மைடையில் அமர்ந்து, இரவு 7 மணி வரை காத்திருந்தனர். பா.ஜ.,வை விமர்சிக்கும் தேர்தல் பிரசார விளம்பரம் மட்டும் ஒலிபரப்பப்பட்டது.
த.வா.க., தலைவர் வேல்முருகன், காங்., முன்னாள் தலைவர் அழகிரி, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் 2 வேட்பாளர்கள் மட்டும் மேடையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரவு 7:00 மணிக்கு வந்த ஸ்டாலின் வந்தார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி, வேட்பாளர்கள் வி.சி., ரவிக்குமார், காங்., விஷ்ணுபிரசாத் ஆகியோர் மட்டும் சில நிமிடங்கள் பேசினர். அதன் பிறகு கூட்டணி கட்சியினர் பேச வாய்ப்பளிக்காமல், முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசி முடித்தவுடன் 8:15 மணிக்கு கூட்டம் முடிந்தது.
'இண்டியா' கூட்டணி கட்சி பிரசார பொதுக்கூட்டம் என அறிவித்து விட்டு, கூட்டணி கட்சி தலைவர்களை கூட சில நிமிடங்கள் பேச, வாய்ப்பளிக்காததால் அந்த கட்சியினர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
-நமது நிருபர்-

