ADDED : ஆக 01, 2024 01:57 AM
சென்னை:கடலோர பகுதிகளில் மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில், 14 மாவட்டங்களில் புதிய திட்டம், 100 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய, 14 மாவட்டங்கள் கடலோர பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த 14 மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மாசு தடுப்பு பணிகளுக்காக, புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடலோர பகுதிகளில் மாசு கண்காணிப்பு மையங்கள், நீல படைகள், மீன் வலை சேகரிப்பு மையங்கள் போன்றவை ஏற்படுத்தப்படும்.
இத்திட்டத்தை, 100 கோடி ரூபாயில் செயல்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை உலக வங்கி உதவியுடன் திரட்ட திட்டமிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.