UPDATED : மே 12, 2024 05:57 AM
ADDED : மே 12, 2024 05:45 AM

பொள்ளாச்சி: வறட்சியில் இருந்து மரங்களை பாதுகாக்க, 'கோகோ பித்' (தென்னை நார் துகள்) பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும் என, தேசிய தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தென்னை மரங்கள் முற்றிலுமாக காய்ந்து வருவதால் விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி மரங்களை காப்பாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வறட்சியில் இருந்து மரங்களை பாதுகாக்க, கோகோ பித் (தென்னை நார் துகள்) பயன்டுத்தலாம், என, தேசிய தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:
உலகத்தில், 125 நாடுகள், நமது நாட்டில் இருந்து கோகோ பித்தை வாங்கி, தண்ணீர், உரச்செலவை மிச்சப்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். மிகப்பெரிய வறட்சி கண்டமாக அறியப்படும் ஆப்பிரிக்காவில், மண்ணில்லா விவசாயத்துக்கு கோகோ பித்தை உபயோகப்படுத்துகின்றனர்.
கடந்த, 1980ம் ஆண்டுகளில் இருந்து வெளிநாடுகளில், விவசாயத்துக்கு கோகோ பித் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில், மிகப்பெரிய வெப்ப அலைகளின் காரணமாக அனைத்து பகுதிகளிலும் வறட்சி ஏற்பட்டு, 20 - 30 ஆண்டுகள் வளர்ந்த மரங்களும் கூட காயத்துவங்கியுள்ளது.
தண்ணீரை விலைக்கு வாங்கி மரத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறோம். இதற்கு மாற்றாக கோகோ பித் பயன்படுத்தலாம்.ஒரு கிலோ கோகோ பித், மூன்று முதல், ஏழு லிட்டர் வரை தண்ணீரை ஈர்த்து வைக்கும் தன்மை உள்ளது.
ஒரு மரத்தை சுற்றிலும், ஐந்து முதல் 10 கிலோ வரை இதை போட்டு, 25 முதல், 40 லிட்டர் நீர் பாய்ச்சினால், அந்த மரத்துக்கு சூழ்நிலையை பொறுத்து, ஒரு வாரம் முதல், 10 நாட்களுக்கு தண்ணீர் தேவை இருக்காது.
இதுதவிர, நிலங்களின் தன்மையை பொறுத்து, ஒரு ஏக்கருக்கு ஆறு டன் முதல், 10 டன் வரை ஆண்டுக்கு ஒரு முறை கோகோ பித் போடுவதால், ஈரப்பதத்தோடு, பல்லுயிர் பெருக்கத்துக்கும் உதவியாக இருக்கும்.
ஒரு கிலோ கோகோ பித், 10 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.நம் நாட்டில் உற்பத்தியாகும், 21 லட்சம் டன் கோகோ பித்தில், 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதம் உள்ள, 20 சதவீதம் மட்டுமே இங்கு பல்வேறு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
வறட்சியில் இருந்து மீள உதவும் கோகோ பித் பயன்படுத்தி, கிராம பொருளாதாரம் மேம்பட முயற்சி எடுப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.