தமிழகத்தில் காபி சாகுபடி செலவு ஏக்கருக்கு ரூ.40,000 அதிகரிப்பு விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு
தமிழகத்தில் காபி சாகுபடி செலவு ஏக்கருக்கு ரூ.40,000 அதிகரிப்பு விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு
ADDED : டிச 14, 2024 09:16 PM
சென்னை:போதிய மழை இல்லாதது, இடுபொருட்கள் செலவு உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் காபி விவசாயிகளுக்கு சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. அதே சமயம், காபி கொட்டைக்கு உரிய விலை கிடைக்காதது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகில் உள்ள கீழ் பழனி மலை, சிறுமலை; சேலம் மாவட்டம், ஏற்காடு; நீலகிரி மாவட்டம், கோத்தகிரி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை ஆகிய நான்கு மலை பகுதிகளில், காபி கொட்டை விளைச்சல் அதிகம் உள்ளது.
விளைச்சல் பாதிப்பு
ஆண்டுக்கு சராசரியாக, 14,000 டன் அராபிகா, 5,500 டன் ரோபஸ்டா வகை காபி கொட்டை விளைச்சல் உள்ளது. கடந்த 2022 - 23ல், 13,250 டன் அராபிகா, 5,450 டன் ரோபஸ்டா என, மொத்தம், 18,700 டன் காபி கொட்டை விளைச்சல் இருந்தது.
அராபிகா காபி பயிர் தான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்., மாதங்களில் காபி பூ பூக்கும்; செப்., அக்., மாதங்களில் மகசூல் எடுக்கப்படும்; பிப்ரவரியில் அறுவடை முடியும்.
காலநிலை மாற்றத்தால் போதிய மழை இல்லாதது, ஒரே சமயத்தில் காபி கொட்டைகள் பழுக்காமல் சீரற்று பழுப்பது உள்ளிட்ட காரணங்களால், காபி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால், காபி சாகுபடியின்போது ஏக்கருக்கு, 300 கிலோ காபி கொட்டை கிடைப்பதற்கு பதில், 150 கிலோ மட்டுமே கிடைக்கிறது.
மேலும், இடு பொருட்கள் விலை உயர்வு, காபி தோட்ட பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால், சாகுபடி செலவு ஏக்கருக்கு, 40,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப உரிய விலை கிடைப்பதில்லை.
இதுகுறித்து, காபி பயிரிடும் விவசாயிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள மொத்த காபி விவசாயிகளில், 90 சதவீதம் பேர், சிறு விவசாயிகள். மழை இல்லாதது, இடுபொருட்கள் செலவு உள்ளிட்ட காரணங்களால், காபி சாகுபடி செலவு மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப உரிய விலை கிடைப்பதில்லை.
சிரமம்
தற்போது, கிலோ காபி கொட்டை, 430 ரூபாய்க்கு விலை போகிறது. இது, முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது குறைவு தான். இந்த விலையைகூட வியாபாரிகள் வழங்காமல், கிலோ, 400 ரூபாய்க்கு தருமாறு கேட்கின்றனர்.
காபி பயிர் சாகுபடி குறைந்து, அதற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், உரிய விலையும் கிடைக்காததால், பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காபி பயிரிடும்போது ஊடுபயிராக ஆரஞ்சு, எலுமிச்சை, மலை வாழை ஆகியவை பயிரிடப்பட்டன. காலநிலை மாற்றத்தால், அவற்றையும் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.