கூட்டுறவு விற்பனை ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க குழு நியமனம்
கூட்டுறவு விற்பனை ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க குழு நியமனம்
ADDED : மார் 08, 2025 12:15 AM

தமிழகம் முழுதும் உள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதால், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுதும், 115 வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றின் வாயிலாக, மொத்த விற்பனை பண்டக சாலை, ரேஷன் கடைகள், வேளாண் விளைபொருள் இருப்பு கிடங்கு, வேளாண் பொருள் ஏல வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 2020ல் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது.
ஐந்தாண்டு காலத்துக்கான ஊதிய நிர்ணயம் தற்போது முடிவு பெற்றுள்ளது. 2025 ஜன., மாதம் முதல், ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மண்டல துணை பதிவாளர் சுந்தரராஜா தலைவராகவும், நாமக்கல் சரக துணை பதிவாளர் ஜேசுதாஸ் குழு கூட்டுநர் மற்றும் உறுப்பினர்களாக, பெருந்துறை மற்றும் சைதாப்பேட்டை சங்கங்களின் பொதுமேலாளர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு, தமிழகம் முழுதும் உள்ள விற்பனை சங்கங்களை அதன் தரத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தி, அவற்றில் உள்ள பணியாளர் நிலைகள் திருத்துதல், வகைப்பாட்டில் உள்ள சங்க ஊழியர்கள் இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைவது ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்.
இப்பணிகளை ஒரு மாதத்துக்குள் முடித்து அறிக்கை அளிக்குமாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு காரணமாக, இச்சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது
-- நமது நிருபர் -.