ADDED : ஏப் 09, 2024 02:07 AM
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. மே, 10ல் ரிசல்ட் வெளியாகிறது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், கடந்த மாதம் முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
அடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், நேற்று சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவு பெற்றன. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட, 9.25 லட்சம் பேரில், 17,000 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர். இவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் ஆனவர்கள் என்று கூறப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள்கள் வரும், 12ம் தேதி முதல் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. தேர்வு முடிவை, மே, 10ல் வெளியிட, அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர்கள் பாராட்டு
ஏற்கனவே நடந்த அறிவியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், நேற்றைய சமூக அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருக்குமோ என, மாணவ, மாணவியர் அச்சத்துடன் தேர்வு மையத்துக்கு சென்றனர்.
ஆனால், மாணவர்களுக்கு நிம்மதி தரும் வகையில், வினாத்தாள் நடுத்தரமாக அமைந்திருந்தது. சராசரி மாணவர்கள், தேர்ச்சி பெறும் வகையிலும், நன்றாக படிக்கும் மாணவர்கள், 'சென்டம்' என்ற, 100க்கு 100 மதிப்பெண் பெறும் வகையிலும் இருந்தது.
இந்த வினாத்தாள் தற்கால போட்டி தேர்வு அணுகுமுறைக்கு, முன்மாதிரியான வினாத்தாளாக இருந்தது. பொதுஅறிவு மற்றும் அரசியல் சார்ந்த கேள்விகள் இடம் பெற்றன.
நகரமயமாக்கலின் பாதிப்புகள், கருப்பு பணம் என்றால் என்ன; மாநில அமைச்சரவையின் தலைவர் யார், உலகமயமாக்கலின் தாக்கம், மாநிலங்களவையின் பதவிக்காலம் எவ்வளவு, வெளியுறவு கொள்கையை நிர்ணயிக்கும் காரணிகள்.
பழவேற்காடு ஏரி அருகில் உள்ள இரு மாநிலங்கள் என, பல வகைப்பட்ட பொது அறிவு மற்றும் அரசியல் கொள்கை சார்ந்த கேள்விகள் இடம் பெற்றதாக, ஆசிரியர்கள் பாராட்டினர்.

