ADDED : ஆக 05, 2024 01:07 AM
சென்னை:''கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துவதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது,'' என, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசினார்.
சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில், 2023 - 24ம் ஆண்டு பதக்கம் பெற்ற மாணவர்கள்; 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
குழந்தைகள், பள்ளி படிப்பை நன்றாக படித்து முடிக்க வேண்டும். பள்ளி படிப்பை முடிப்பவர்கள், உயர் கல்வியில் சேர வேண்டும்.
பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளாக வரவேண்டும் என்பது தான் அரசின் லட்சியம்.
தமிழகம் இன்று கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்றால், அதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பே காரணம்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, வறுமையில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்தச் சட்டத்தை செயல்படுத்துவதில், நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
இந்தச் சட்டப்படி, மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, அரசே வழங்க வேண்டும். முந்தைய ஆட்சிக் காலங்களில், இந்தத் தொகை தாமதமாக வழங்கப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 1,200 கோடி ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள், மகேஷ், சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.