காலாவதி பால் பொருட்கள் ஆவின் பாலகங்களுக்கு கட்டாய சப்ளை
காலாவதி பால் பொருட்கள் ஆவின் பாலகங்களுக்கு கட்டாய சப்ளை
ADDED : மே 29, 2024 06:01 AM

சென்னை : காலாவதியாகும் நிலையில் உள்ள பால் பொருட்கள், ஆவின் பாலகங்களுக்கு கட்டாயமாக சப்ளை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆவின் வாயிலாக பால் மட்டுமின்றி, 230க்கும் மேற்பட்ட பால் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், வெண்ணெய், நெய், பால் பவுடர் உள்ளிட்டவற்றிற்கு வரவேற்பு உள்ளது. ஆனால், வெண்ணெய், பால் பவுடர் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. நெய் மட்டுமே அவ்வப்போது விற்பனைக்கு வருகிறது.
தயிர், லஸ்சி, மோர், பால்கோவா, மைசூர்பாகு, மிக்சர், பட்டர் முருக்கு உள்ளிட்டவை தயாரிப்பில், ஆவின் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. கோடையில் இவற்றின் விற்பனை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
கோடை மழை காரணமாக, குளிர்ந்த சூழல் நிலவுவதால், பல மாவட்டங்களில் குளிர்ச்சியான ஆவின் பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது. அவை, தேக்கம் அடைவதால், ஆவினுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆவின் உற்பத்தி பிரிவு மற்றும் விற்பனை பிரிவிற்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், விற்பனை குறைந்த பொருட்களை அதிகம் தயாரித்து ஸ்டாக் வைக்கப்பட்டு வருகிறது.
இவை, காலாவதி தேதியை நெருங்கும் போது, வேறு வழியின்றி பாலகங்களுக்கு கட்டாயமாக சப்ளை செய்யப்படுகின்றன. இதனால், பாலகங்களை நடத்துவோர் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.