sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருணை அடிப்படையிலான பணியில் மைனருக்கு சலுகை

/

கருணை அடிப்படையிலான பணியில் மைனருக்கு சலுகை

கருணை அடிப்படையிலான பணியில் மைனருக்கு சலுகை

கருணை அடிப்படையிலான பணியில் மைனருக்கு சலுகை

1


ADDED : செப் 08, 2024 04:29 AM

Google News

ADDED : செப் 08, 2024 04:29 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கருணை அடிப்படையில் பணிக்கு விண்ணப்பிக்கும்போது உரிய வயதை எட்டாத விண்ணப்பதாரர்களின் வயது வரம்பை தளர்த்துவது தொடர்பாக அரசாணையில்தேவையான திருத்தங்கள் அல்லது மாற்றங்களை செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், டி.சாணார்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை கஸ்துாரி, 2012 டிசம்பர் மாதத்தில் இறந்தார். இதையடுத்து, கருணை வேலை கேட்டு, அவரது மகன் அருண் பாலாஜி விண்ணப்பித்தார். விண்ணப்பிக்கும் போது, அவரின் வயது 17.

சில குறைபாடுகள் இருப்பதாக கூறி, அருண் பாலாஜியின் விண்ணப்பத்தை, 2014 அக்., 23ல் தாராபுரம் கல்வி அதிகாரி திருப்பி அனுப்பினார். குறைபாடுகளை சரிசெய்து, 2015 ஜூன் 16ல், மூலனுார் வட்டார கல்வி அதிகாரியிடம் திருப்பி சமர்ப்பித்தார். விண்ணப்பத்தைத் திருப்பி சமர்ப்பிப்பதற்கான இந்த செயல்முறை, 2017 வரை நடந்தது.

பின், 2017 ஜூன் 21ல் தாராபுரம் மாவட்ட கல்வி அதிகாரி கடிதத்தின்படி, ஜூன் 28ல் நேர்காணலில் அருண் பாலாஜி கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பிக்கும்போது, உரிய வயதை எட்டவில்லை என கூறி, அருண் பாலாஜியின் விண்ணப்பத்தை, 2020 டிச., 1ல் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நிராகரித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, 2021ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அருண் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளதால், கஷ்டமான சூழலில், அவர் இல்லை என்பதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் அருண் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ்பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கைசர் ஆஜராகி வாதாடியதாவது:

விண்ணப்பிக்கும்போது மனுதாரரின் வயது 17. ஆனால், தாராபுரம் மாவட்ட கல்வி அதிகாரி, அவரின் மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொண்டபோது, 18 வயதை எட்டி விட்டார். குடும்ப வருமானத்தை மதிப்பிடும்போது, இறந்த ஊழியரின் ஓய்வூதியம் மற்றும் அசையா சொத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என, 2020 தொழிலாளர் துறை அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியம் பெறுதல் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன என்பதை குறிப்பிட்டு, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏற்புடையதல்ல. கடன்கள் பெற்று, கடினமான நிதி நெருக்கடி சூழலில் தான், தன் பட்டப்படிப்பை மனுதாரர் முடித்தார். மூன்று ஆண்டுக்குள் கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க, ஏழு ஆண்டுகள் வரை காலதாமதம் செய்துள்ளனர். இது, மனுதாரருக்கு தேவையற்ற மன உளைச்சல், கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு வாதாடினார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கருணை அடிப்படையில் பணி கோரும் விண்ணப்பங்கள், பல சந்தர்ப்பங்களில் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இதன் விளைவாக, பல வழக்குகளில் விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை பரிசீலிக்க கோரி, உயர் நீதிமன்றத்தை அணுக நேரிடுகிறது.

நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்த பின்னும், கருணை வேலை கோரும் விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கு அற்பமான, எரிச்சலுாட்டும் காரணங்கள் கூறப்படுகின்றன.

இதை எதிர்த்தும், விண்ணப்பதாரர்கள் வழக்கு தொடருகின்றனர். வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில், இறந்த பணியாளரின் குடும்பம் துக்கத்திலும், நிதிச் சிக்கலிலும் இருக்க நேரிடுகிறது. கருணை நியமனத்துக்கான விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படுவதில்லை. கடந்த 20 ஆண்டுகளாக, இதுபோல வழக்குகளை இந்த நீதிமன்றம் கண்டு வருகிறது.

இந்த வழக்கு தனித்துவமானது. கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பிக்கும்போது, மனுதாரர் 18 வயதை எட்டவில்லை. மூன்று ஆண்டுகளுக்குள் உரிய தகுதியை எட்டி விட்டார் என்பதால், அவருக்கு தளர்வு வழங்கி விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்.

உரிய வயதை எட்டாதபோது, கருணை அடிப்படையில் பணி கோரும் விண்ணப்பத்தை பரிசீலிப்பது தொடர்பாக, 2020ல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வெளியிட்ட அரசாணையில் உரிய திருத்தங்களை, பள்ளி கல்வி துறை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு உரிய வழிகாட்டுதல்களை வகுத்து, அதை கவனமாக பின்பற்றும்படி, அனைத்து அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

வயது தளர்வு தொடர்பாக, இரு வாரங்களுக்குள் மனுதாரர் புதிய விண்ணப்பம் அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து, 12 வாரங்களில் உரிய உத்தரவை, அரசு பிறப்பிக்க வேண்டும். இவ்விவகாரத்தில், 2020ல் திருப்பூர் முதன்மை கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவும், 2021ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us