புழல் சிறையில் உள்ள என் கணவருக்கு சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு கைதான பெண் வாக்குமூலம்
புழல் சிறையில் உள்ள என் கணவருக்கு சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு கைதான பெண் வாக்குமூலம்
ADDED : ஜூலை 05, 2024 01:22 AM
சென்னை:'சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, என் கணவருக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது' என, கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன், சென்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து, இலங்கைக்கு கடத்த இருந்த, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4.17 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதை பொருளை, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, மண்டபம் முகாமில் தங்கி இருந்த, இலங்கையை சேர்ந்த கிருஷ்ணகுமாரி, 55 உள்ளிட்ட, ஒன்பது பேரை கைது செய்தனர்.
கைதான கிருஷ்ணகுமாரி அளித்த வாக்குமூலம்:
என் கணவர் காசிலிங்கம், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
கடத்தலுக்கு அவர்கள் சைகை மொழியை பயன்படுத்தி வந்தனர். என் கணவருடன் மாதம், 10 முறை, ஆடியோ அழைப்பில் பேசலாம். கைதிகள் வீடியோ அழைப்பில் பேசவும் அனுமதி உண்டு.
என் கணவர் ஆள் காட்டி விரலை காட்டி பேசினால், சென்னை செங்குன்றத்தில், மெத்தாம்பேட்டமைன் தயாராக உள்ளது என்று அர்த்தம்.
என் கணவருடன் சிறையில் இருக்கும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் உள்ள, போதை பொருள் சப்ளையர்கள் குறித்து தகவல் தெரிவிப்பர். அவர்களின் பெயரை சொன்னால் தான், மெத்தாம்பேட்டமைன் கிடைக்கும்.
எங்கள் கும்பலில் முகமது ரியாசுதீன், 27, என்பவர் உள்ளார். அவர், ஹவாலா பண பரிமாற்றம் செய்பவர். வெளிநாட்டு, 'டீலிங்' அனைத்தையும் அவர் தான் கவனித்துக் கொள்வார். ஒருமுறை மெத்தாம்பேட்டமைன் கடத்தி வந்தால், கோடிக்கணக்கான ரூபாய் அவருக்கு கமிஷனாக தரப்படும்.
என் கணவருடன் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பில் பேசும் போது, யாரை, எப்போது, எங்கே சந்திக்க வேண்டும் என்ற விபரத்தை தெரிவிப்பார். அதை, ரீயாசுதீனிடம் தெரிவிப்பேன். அவர் கச்சிதமாக வேலையை முடித்து விடுவார்.
மும்பையில் இருந்து, சென்னை வழியாக மண்டபம் முகாமிற்கு மெத்தாம்பேட்டமைன் கடத்தி வருவோம். அங்கிருந்து படகு வாயிலாக, இலங்கைக்கு போதை பொருளை கடத்துவோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.