வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் வாரிய ஒப்புதல் விவகாரத்தில் குழப்பம்
வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் வாரிய ஒப்புதல் விவகாரத்தில் குழப்பம்
ADDED : ஜூன் 25, 2024 12:08 AM

சென்னை: 'மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 3 கிலோ வாட் வரை சாத்தியக்கூறு தொழில்நுட்ப ஒப்புதல் பெற தேவையில்லை' என, மின் வாரியம் தெரிவித்தது. இதை, 10 கிலோ வாட்டாக அதிகரித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இது தொடர்பாக, மின் வாரியம் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்காததால், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
வீடு உள்ளிட்ட கட்டடங்களில், பல்வேறு திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு அதன் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த பின் ஒப்புதல் தரப்படும்.
புதுப்பிக்கத்தக்க மின் பயன்பாட்டை ஊக்குவிக்க, தாழ்வழுத்த பிரிவில், 3 கிலோ வாட் வரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ஒப்புதல் பெற தேவையில்லை என, கடந்த ஜனவரியில் மின் வாரியம் உத்தரவிட்டது.
மத்திய அரசு, 10 கிலோ வாட் வரை விலக்கு அளிக்குமாறு, மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களுக்கு உத்தரவிட்டது.
அதை பின்பற்றி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், மின் நிலையம் அமைக்க, 10 கிலோ வாட் வரை விலக்கு அளித்து, கடந்த மாதம் உத்தரவிட்டது.
இது, இன்னும் அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதுடன், ஒப்புதல் அளிக்கவும் தாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சூரியசக்தி மின் நிலைய உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
வீடுகளில் சராசரியாக, 5 - 6 கிலோ வாட் திறனில் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இருப்பினும், சாத்தியக்கூறு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்யப்படுகிறது. 10 கிலோ வாட் வரை விலக்கு அளிக்க ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஆனால், 3 கிலோ வாட் வரை தான் விலக்கு தேவை இல்லை என, பொறியாளர்கள் கூறுகின்றனர். மின் வாரியம் இதை தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.