காங்., தலைவர் மர்மச்சாவு வழக்கு: சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
காங்., தலைவர் மர்மச்சாவு வழக்கு: சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
ADDED : மே 23, 2024 11:55 PM

திருநெல்வேலி : திருநெல்வேலியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் 58, மர்மமான முறையில் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் உடனடியாக விசாரணையை துவக்கினர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். மே 2ம் தேதி இரவில் காணாமல் போனார். 3ம் தேதி அவரது மகன் உவரி போலீசில் புகார் தெரிவித்தார். 4ம் தேதி காலையில் அவர்களது வீட்டு பின்புறம் தோட்டத்தில் ஜெயக்குமார் உடல் கருகி இறந்து கிடந்தார். உவரி போலீசார் மர்மச் சாவு என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படை குழுக்கள் விசாரித்தன. அவரது வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு மரண வாக்குமூல கடிதங்களில் தான் கொல்லப்படலாம் என கூறியிருந்ததால் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த காங்., தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் தற்கொலை செய்து இருந்தால் எப்படி இறந்திருப்பார் எனவும் போலீசார் மூலம் நடித்து சோதித்து பார்த்து விட்டனர். தற்கொலை செய்து கொண்டாரா கொலை செய்யப்பட்டாரா என இன்னும் போலீசார் முடிவுக்கு வரவில்லை. உடல் கருகி இருந்ததால் பின் நாட்களில் ஆள்மாறாட்டம் என புகார் வந்து விடக்கூடாது என்பதற்காகவும், ஜெயக்குமாரின் குடும்பத்தினர் சந்தேகப்பட்டதாலும் ஜெயக்குமார் உடல் பாகம் டி.என்.ஏ ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
இந்நிலையில் ஜெயக்குமார் இறப்பு வழக்கு நேற்று முன்தினம் இரவில் திடீரென சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. அதையும் ரகசியமாக வைத்திருந்தனர்.
நேற்று காலையில் சி. பி. சி .ஐ. டி., கூடுதல் எஸ்.பி. சங்கர், இன்ஸ்பெக்டர் உலக ராணி மற்றும் குழுவினர் தடயவியல் நிபுணர்கள் கரைச்சுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் வீட்டு தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர் இறந்து கிடந்த பள்ளத்திற்கு அருகில் புதிதாக ஒரு சிறிய பள்ளம் தோண்டி ஆய்வு செய்தனர்.ஜெயக்குமார் வீட்டில் யாரும் இல்லை. புதிய விசாரணை துவங்கி விட்டது என்பதை காட்டிக் கொள்வதற்காக அதிகாரிகள் உவரி, கரைச்சுத்து புதூர் சென்றனர்.
கிடப்பில் கிடக்கும் வழக்குகள்
குற்ற வழக்குகளில் உள்ளூர் போலீசார் விசாரிக்க முடியாத அளவு சிக்கல்கள் இருந்தாலோ அரசியல் பின்னணி இருந்தாலோ வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்படுவது வழக்கம்.
திருநெல்வேலியில் இரண்டு டி.ஐ.ஜி.கள், ஒரு எஸ்.பி., பத்து டி.எஸ்.பி.,கள் தலைமையில் பத்து தனிப்படைகள், வெளிமாவட்ட தடயவியல் நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய்கள், விரல் ரேகை நிபுணர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் விசாரித்தும் கொலையா, தற்கொலையாஎன தெரியாத நிலையில் ஜெயக்குமார் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் கடந்த 2019 ஜூலை 23ல் தி.மு.க., முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது, 2020 ஜூன் 19ல் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசார் தாக்கி இறந்த சம்பவம், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கடந்த ஆண்டு ஏ.எஸ்.பி பல்வீர்சிங், வழக்குகளில் கைதாகும் நபர்களின் பற்களை பிடுங்கி விசாரணை மேற்கொண்டதாக புகார் தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதே போல மேலும் பல வழக்குகள் இப்பிரிவுக்கு மாற்றப்பட்டு கிடப்பில் கிடக்கின்றன. இன்ஸ்பெக்டர் உலகராணி தான் இதையும் விசாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.