காங்., - எம்.எல்.ஏ.,க்கு சீட் வழங்க தி.மு.க., தடை!
காங்., - எம்.எல்.ஏ.,க்கு சீட் வழங்க தி.மு.க., தடை!
ADDED : மார் 23, 2024 02:17 AM

''விண்வெளி தொழிற்பூங்கா அமைத்து, மாணவர்களை ஊக்குவிக்க திட்டமிட்டிருக்காவ வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதால, தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும்னு சொல்லுதாங்கல்லா...
''துாத்துக்குடி எம்.பி., கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டுல, விண்வெளி தொழிற்பூங்கா ஆய்வு மையத்திற்கான கட்டடம் கட்டி, அதுல, ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டிருக்காவ வே...
''பட்டதாரிகளின் மேல் படிப்புக்கும், ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் இந்த ஆய்வு மையம் உதவியா இருக்குமாம்... இந்த திட்டத்தை நிறைவேற்ற, தொழில் துறையிடம் அனுமதி கேட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பறக்கும் படைக்கே கடுக்கா குடுத்துட்டு, விற்பனை நடக்குதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.
''அப்படி என்னத்தை விக்கறா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சென்னையை ஒட்டியிருக்கிற செங்குன்றம் மதுவிலக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட செங்குன்றம், சோழவரம், நல்லுார் சுற்றுவட்டாரங்கள்ல, கள்ளச்சந்தையில் மது விற்பனை கனஜோரா நடக்குதுங்க... தேர்தல் பரபரப்பு மற்றும் பல கோவில்கள்ல பங்குனி உத்திர திருவிழாக்கள் நடக்கிறதால, மது பாட்டில்களுக்கான தேவை அதிகமா இருக்குதுங்க...
''இதனால, பார் நடத்துறவங்க மொத்தமா பாட்டில்களை வாங்கி, மது விலக்கு மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் பல இடங்கள்ல பதுக்கி வச்சு, காலையிலயே விற்பனையை துவங்கிடுறாங்க...
''தேர்தல் பறக்கும் படையினர் கண்ணுல மண்ணை துாவிட்டு, இந்த விற்பனை சூப்பரா நடக்குதுங்க... அதனால, 'பறக்கும் படையினர் சும்மா வாகனங்கள்ல சுத்தி வராம, இந்த கள்ளச்சந்தை மது விற்பனையை தடுக்கணும்'னு பொதுமக்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எம்.எல்.ஏ.,க்களுக்கு சீட் கொடுக்காதீங்கோன்னு சொல்லிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''இது, எந்த கட்சி விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தி.மு.க., கூட்டணியில, காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியிருக்காளோல்லியோ... இதுல, கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதிகள்ல சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சீட் கேட்டிருக்கா ஓய்...
''இது, தி.மு.க., தலைமைக்கு தெரியவந்திருக்கு... 'அவா, எம்.பி.,யாகி டில்லிக்கு போயிட்டா, அப்பறமா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்... ஆளுங்கட்சி கவுரவத்தை காப்பாத்தணுமேன்னு நாங்க தான், 100, 200 கோடின்னு செலவழிக்கணும்... அதனால, சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கும் சீட் தராதீங்கோ'ன்னு டில்லி மேலிடத்திடம் தி.மு.க., தரப்பு தெளிவா சொல்லிடுத்து ஓய்...
''இதனால, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தரப்பு, 'அப்படின்னா, எங்க குடும்பத்துல யாருக்காவது தாங்கோ'ன்னு டில்லி மேலிடத்துல காய் நகர்த்திண்டு இருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

