காங்., மேலிடம் எச்சரிக்கையால் அடக்கி வாசித்த தமிழக கோஷ்டிகள்
காங்., மேலிடம் எச்சரிக்கையால் அடக்கி வாசித்த தமிழக கோஷ்டிகள்
ADDED : ஆக 01, 2024 11:30 PM
சென்னை:சென்னையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் காங்., கோஷ்டி தலைவர்கள், 'ஆட்சியில் பங்கு, தனித்து போட்டி' என்றெல்லாம் பேசாமல் அடக்கி வாசித்ததற்கு, மேலிடத்தின் கண்டிப்பே காரணம் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 10ல் போட்டியிட்டு, அனைத்திலும் வெற்றி பெற்றது. 'இந்த வெற்றிக்கு, தி.மு.க., தான் காரணம்' என, காங்., இருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.,வான இளங்கோவன் உள்ளிட்ட பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரமோ, 'ஆட்சியில் பங்கு வேண்டும்; தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்' என்று பேசினர். ஒரு சிலர், 'தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்' என்று பேசி, கூட்டணியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தினர்.
அவரது பேச்சுக்கு கடும் எதிப்புத் தெரிவித்த இளங்கோவன், 'முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நடப்பதே காமராஜர் ஆட்சி தான்' என்றார். இதையடுத்து, கார்த்தி ஆதரவாளர்களும், இளங்கோவன் ஆதரவாளர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.
கார்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு, முன்னாள் மாநில தலைவர் அழகிரி ஆதரவாளர்கள் கட்சி மேலிடத்தில் புகார் அளித்தனர். தி.மு.க., தரப்பிலும், டில்லி காங்., மேலிடத்தில், தமிழக காங்கிரஸாரின் பேச்சு குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, 'தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும், இனி கூட்டணி குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்தும் பேசக் கூடாது' என, டில்லி மேலிடம் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் வாயிலாக கண்டித்துள்ளது.
இந்நிலையில், தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன் தலைமையில், காமராஜர் பிறந்த நாள் விழா தி.நகரில் நடந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால், ஆட்சியில் பங்கு, தனித்து போட்டியிடலாம் என்ற கருத்துக்களை சமீப காலமாக முழங்கி வந்த கட்சி நிர்வாகிகள் பலரும், இக்கூட்டத்தில் பேசினர். ஆனால், தாங்கள் ஏற்கனவே வலியுறுத்திய எந்தக் கருத்தையும் பேசாமல் தவிர்த்து விட்டனர்.
மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''யார் வேண்டுமானாலும் காமராஜரை கொண்டாடலாம்; ஆனால், அவரை சொந்தம் கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டும் தான் உள்ளது,'' என்று பொத்தாம் பொதுவாக பேசி அமர்ந்தார்.