ரேஷன் கடைகளில் தராசு பி.ஓ.எஸ்., கருவியுடன் இணைப்பு
ரேஷன் கடைகளில் தராசு பி.ஓ.எஸ்., கருவியுடன் இணைப்பு
ADDED : மார் 07, 2025 12:25 AM
சென்னை:ரேஷன் கடைகளில் எடை குறைவாக உணவு தானியங்கள் வழங்குவதை தடுக்க, மின்னணு எடை தராசானது, 'வைபை, புளூடூத்' வாயிலாக, பி.ஓ.எஸ்., கருவியுடன் இணைக்கப்பட உள்ளது.
இதனால், ஊழியர் தராசில் எவ்வளவு பொருளை வைக்கிறாரோ, அந்த எடைதான் கருவியில் பதிவு செய்யப்படும்.
மின்னணு எடை தராசுகளை, பி.ஓ.எஸ்., கருவியுடன் ஒருங்கிணைக்கும் பணிகளை முடிக்க காலக்கெடு நிர்ணயித்து, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, திருப்பத்துார், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, சென்னை வடக்கு, அரியலுார், மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், வரும் 30ம் தேதிக்குள் ஒருங்கிணைக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, துாத்துக்குடி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், சென்னை தெற்கு, வேலுார், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கரூர் மாவட்டங்களில் அடுத்த மாதம் 5ம் தேதிக்குள்; மற்ற மாவட்டங்களில் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.