மும்மொழி கொள்கை தோல்வியை மடைமாற்ற தொகுதி சீரமைப்பு பிரச்னை
மும்மொழி கொள்கை தோல்வியை மடைமாற்ற தொகுதி சீரமைப்பு பிரச்னை
ADDED : பிப் 25, 2025 09:51 PM
கோவை:மும்மொழி கொள்கை பிரச்னை தோல்வி அடைந்ததை மடை மாற்றி, தொகுதி மறு சீரமைப்பு பிரச்னையை கையில் எடுத்துள்ளார், முதல்வர் ஸ்டாலின், என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் மும்மொழி கொள்கை விஷயத்தை மறைக்க, தொகுதி மறு சீரமைப்புக்கு செல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். இது முதல்வர் பதவிக்கு அழகல்ல.மறு சீரமைப்பு வரும்போது, பிரச்னை இல்லாமல் கொண்டு வருவது எங்களது பொறுப்பு. மறுசீரமைப்பால், தென் மாநிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது.
ஒரே நாடு; ஒரே தேர்தல், 2029 பின் தான் வரும். அதைக் கண்டும் முதல்வர், பயந்து கொண்டிருந்தார்.
யாருமே தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசவில்லை. முதல்வருக்கு ஏன் இந்த கபட நாடகம்? ஒன்றுமில்லாமல், அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது, குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்வது போன்றது.
இரண்டு மொழி படித்து தான், தமிழகம் முன்னேறி உள்ளது என்றால், முதல்வரின் கணக்கு வாத்தியார் யார் என்பதை, பார்க்க வேண்டும்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பு மீது, எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தி.மு.க.,வை சார்ந்து இருக்கும் இந்த அமைப்பு, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டால், முதல்வரின் தூண்டுதலாககூட இருக்கலாம். பா.ஜ., அரசு ஊழியர்களின் பக்கம் இருக்கிறது. அரசுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய அரசு ஊழியர் சங்கம், தி.மு.க.,வுக்கு தேர்தல் பிரசாரம் கூட செய்யும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.