சென்னை கொளத்துாரில் ரூ.110 கோடியில் சிறப்பு மருத்துவமனை கட்டுமானம் தீவிரம்
சென்னை கொளத்துாரில் ரூ.110 கோடியில் சிறப்பு மருத்துவமனை கட்டுமானம் தீவிரம்
ADDED : மே 12, 2024 12:17 AM

சென்னை:சென்னை கொளத்துார் தொகுதியில், 110 கோடி ரூபாயில் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய மூன்று அடுக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடம், 55.07 கோடி ரூபாயில் கட்ட, 2022 அக்., 3ல் முதல்வர் உத்தரவிட்டார். கடந்த ஆண்டு மார்ச் 8ல் அடிக்கல் நாட்டினார்.
மூன்று தளங்கள்
இப்பணிகள் நடந்து வந்த நிலையில், மேலும் கூடுதலாக மூன்று தளங்கள் கட்ட, 54.82 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இப்பணியை கடந்த மார்ச் 7ல், முதல்வர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை வழியே, 110 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இக்கட்டடம் 2.12 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஆறு தளங்களுடன், 556 படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரை தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள், நவீன சலவையகம், மத்திய கிருமி நீக்கல் துறை, வாகனம் நிறுத்துமிடம் இடம் பெறும்.
முதல் தளத்தில் பிரசவ வார்டுகள், மறுவாழ்வு வார்டுகள், ரத்த வங்கி, மூன்று அறுவை சிகிச்சை அரங்கங்கள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இரண்டு மற்றும் மூன்றாம் தளத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட வார்டு, மருத்துவ வார்டுகள், தனி அறைகள், முழு உடல் பரிசோதனை பிரிவு, குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவுகள்.
நீரிழிவு வார்டு
மற்ற மூன்று தளங்களில், சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், நீரிழிவு வார்டு, இதயவியல் வார்டுகள், கேத் ஆய்வகம், நான்கு அறுவை சிகிச்சை அரங்கங்கள், புற்றுநோய் வார்டு, கூட்டரங்கம் ஆகியவை, முழு அறை கலன்கள் வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.
இக்கட்டடத்தின் அனைத்து தளங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, பொது கழிப்பறை, நான்கு லிப்ட், மூன்று படிக்கட்டுகள், சாய்வுதளம் போன்ற பிற வசதிகளுடன் அமையக்கூடிய வகையில், கட்டட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.