பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கட்டுப்பாட்டு மையம் திறப்பு
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கட்டுப்பாட்டு மையம் திறப்பு
ADDED : மார் 02, 2025 04:29 AM
சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்க, தேர்வு கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2024 - 25ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, நாளை முதல், 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8 லட்சத்து 21,057 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
அதேபோல, பிளஸ்.1 மாணவர்களுக்கு, வரும், 5ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கும் தேர்வில், 8 லட்சத்து 23,261 மாணவர்களும், வரும் 28 முதல் ஏப்., 15 வரை நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வில், 9 லட்சத்து 13,036 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இதில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 3,316 தேர்வு மையங்கள்; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வு பணிகளை கண்காணிக்க, 45,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 4,800க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்கள், புகார்கள், கருத்துக்களை தெரிவிக்க, அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்வு நாட்களில், ஒவ்வொரு நாளும் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை, 94983 83075; 94983 83076 என்ற கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.