'பேய் போல பரவுகிறது மதமாற்றம்': பா.ஜ., அஸ்வத்தாமன் ஆவேசம்
'பேய் போல பரவுகிறது மதமாற்றம்': பா.ஜ., அஸ்வத்தாமன் ஆவேசம்
ADDED : செப் 12, 2024 07:17 AM

விருத்தாசலம் : ''இந்தியாவில் மதமாற்றம் என்பது ஒரு தேசிய அபாயமாக நடந்து கொண்டிருக்கிறது,'' என தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கூறினார்.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வீரத்துறவி ராமகோபாலனால் ஒரு சிலையை வைத்து துவங்கப்பட்டது. இன்று ஹிந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுதும் ஒன்றரை லட்சம் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் 10 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
ஜாதி, மதம் கடந்து ஒற்றுமைக்காக கொண்டாடப்படும் விழா விநாயகர் சதுர்த்தி மட்டுமே. ஹிந்துக்கள், தமிழர்கள் கூடுகிறோம் என்பதற்காக இதை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.
கடந்த 2018ல் ஒரு அரசாணை போட்டனர். அதை பின்பற்றினால் விநாயகரே வந்தாலும், அவருக்கு சிலை வைக்க முடியாது.
புதிதாக பிள்ளையார் சிலை வைக்க முடியாது என தமிழக காவல்துறை கூறுகிறது. ஆனால், ஆண்டுதோறும் 50,000 விநாயகர் சிலைகள் அதிகரித்து தான் வருகின்றன. சட்டத்துக்கு மேல் யாரும் கிடையாது.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கேட்பவர்களை காவல்துறை துன்புறுத்துகிறது. கஞ்சா, கள்ளச்சாராயம் விற்போரை விட்டு விடுகின்றனர். விநாயகர் சிலை ஊர்வலங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என காவல்துறை கூறுகிறது. அது முழுப் பொய்.
மதமாற்றம் பேய் போல பரவி கொண்டிருக்கிறது. மதமாற்றம் என்பது ஒரு தேசிய அபாயமாக நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிராக பேசவில்லை. ஆனால் மதமாற்றத்திற்கு எதிராக பேசுகிறோம்.
ஹிந்துக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால், சொத்து சேர்க்க முடியாது என நினைக்கின்றனர். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நிறைய மக்கள் செல்வங்களை பெற்று, அவர்களை இந்த தேசத்திற்காக அர்ப்பணியுங்கள்.
இவ்வாறு அஸ்வத்தாமன் பேசினார்.