மதுக்கடைகளில் விற்பனை ஆய்வு கள்ளச்சாராய பலிகள் எதிரொலி
மதுக்கடைகளில் விற்பனை ஆய்வு கள்ளச்சாராய பலிகள் எதிரொலி
ADDED : ஜூன் 27, 2024 01:54 AM
கள்ளச்சாராயத்தால் ஏராளமானோர் உயிரிழந்ததன் எதிரொலியாக, கள்ளச்சாராயம், போலி மது புழக்கத்தைக் கண்டறிய, டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனையை, மது விலக்குப் போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.
டாஸ்மாக் மதுக்கடைகளில் முன்பு இருந்ததை விட, விற்பனை குறைந்ததாகத் தெரிந்தால், அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் அல்லது போலி மது புழக்கத்தில் இருக்கும் என்று, ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, இப்போது தமிழகத்திலுள்ள 4800க்கும் அதிகமான மதுக்கடைகளிலும், விற்பனை அளவு குறைந்துள்ளதா என்று, மது விலக்குப் போலீசார் கணக்கெடுக்கத் துவங்கியுள்ளனர்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்களில், மது விற்பனை குறைந்துள்ள கடைகளின் பட்டியலை எடுத்து, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மது விற்பனை குறைந்துள்ள கடையின் மேற்பார்வையாளர்களை அழைத்து, இதுகுறித்து தனிப்பட்ட முறையிலும் விசாரித்து வருகின்றனர்.
இதில், நகரங்களில் அமைந்துள்ள பெரும்பாலான மதுக்கடைகளில், 30 லிருந்து 40 சதவீதம் வரை, விற்பனை குறைந்து இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கு கள் அல்லது போலி மது விற்பனை காரணமா என்கிற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மதுக்கடை ஊழியர்கள், மது விற்பனை குறைவுக்கு, வேறு காரணத்தைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கிளப்களுக்கு வழங்கப்படும் எப்.எல்.,2 லைசென்ஸ், ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலருக்கு வாரி வழங்கப்பட்டது.
அவர்கள் வெவ்வேறு மாவட்டங்களிலும் கிளைகளைப் போல, இவற்றைத் துவக்கி, 'மெகா பார்'களை நடத்தி வந்தனர். தி.மு.க., ஆட்சியில் அது பல மடங்காக அதிகரித்து, எப்.எல்.,2 லைசென்ஸ் வாரி வழங்கப்பட்டு, கிளப்களின் எண்ணிக்கை, புற்றீசலாகப் பெருகியுள்ளது.
கிளப் உறுப்பினர்களுக்கு மட்டுமே, மது விநியோகிக்க வேண்டுமென்ற விதிமுறைகளை மீறி, டாஸ்மாக் மதுக்கடையை விட, சற்று அதிக விலை வைத்து, கடை போலவே மது பாட்டில்களாக விற்பனை செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும், இப்போது 52 எப்.எல்.,2 கிளப் லைசென்ஸ் வழங்கப்பட்டு, மதுக்கடைகளை மிஞ்சும் வகையில், விற்பனை நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்த கிளப்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை குறைகிறது. உதாரணமாக, கோவையில் உள்ள ஒரு மதுக்கடையில் தினமும் 4 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடந்து வந்த நிலையில், அருகில் ஒரு கிளப் வந்த பின், அந்தக் கடையில், மது விற்பனை இரண்டு அல்லது இரண்டே கால் லட்ச ரூபாயைத் தாண்டவில்லை.
இதேபோல, பல கடைகளில் பாதியாக விற்பனை குறைந்துள்ளதை, ஊழியர்கள் விளக்கியுள்ளனர். இதை வைத்து அரசு கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கப் போகிறதா, டாஸ்மாக் விற்பனை குறைவதைத் தடுக்கப் போகிறதா என்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-நமது சிறப்பு நிருபர்-