கவுன்டிங் சென்டர் கேமரா ரிப்பேர்: ஆய்வு பணியில் அதிகாரிகள் குழு
கவுன்டிங் சென்டர் கேமரா ரிப்பேர்: ஆய்வு பணியில் அதிகாரிகள் குழு
ADDED : மே 07, 2024 05:06 AM

சென்னை : ஓட்டு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை, அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, அவை பழுதின்றி செயல்பட, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுகள், 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு, அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டுள்ளன.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளனர். அறை உள்ளேயும், வெளியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி, ஈரோடு, தென்காசி, விழுப்புரம் என, அடுத்தடுத்து மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள கட்டடத்தில், கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்தது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்ததற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடியும் காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: ஒரு சில பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பழுதடைந்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு சில தொழில்நுட்ப பிரச்னை காரணம் என்று கூறப்படுகிறது.
இப்புகார் வந்ததும், அனைத்து மாவட்டங்களிலும், மின் துறை, பொதுப்பணி துறையின் எலக்ட்ரிக்கல் பிரிவு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவில், கண்காணிப்பு கேமராக்கள் பழுதின்றி செயல்பட, தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒயர்கள் பழுதடைந்திருந்தால், அதை மாற்ற வேண்டும். கூடுதலாக ஜெனரேட்டர், யு.பி.எஸ்., தேவைப்பட்டால், அதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.