தேர் திருவிழாவின் போது விதிமுறைகளை பின்பற்ற ஐகோர்ட் அறிவுரை
தேர் திருவிழாவின் போது விதிமுறைகளை பின்பற்ற ஐகோர்ட் அறிவுரை
ADDED : மே 16, 2024 01:28 AM
சென்னை:கோவில் தேர் திருவிழாவின் போது, அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2022 ஜூனில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள காளியம்மன் கோவிலில், தேர் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது, தேர் கவிழ்ந்ததில், ஆறு பேர் காயம் அடைந்தனர்; ஒருவர் பலியானார்.
இதையடுத்து, ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தேர் திருவிழாவின் போது விதிமுறைகளை பின்பற்றாததால் தான், விபத்து நடந்துள்ளது. விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் தேர் திருவிழாவின் போது, விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. பென்னாகரம் கோவில் தேர் கவிழ்ந்தது தொடர்பாக, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்தும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்த முதல் அமர்வு, 'அரசு தரப்பில் வகுக்கப்பட்ட விதிமுறைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். அசம்பாவிதங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.