போலி என்.சி.சி., முகாமில் பாலியல் தொல்லை போலீஸ் விசாரணையில் ஐகோர்ட் அதிருப்தி
போலி என்.சி.சி., முகாமில் பாலியல் தொல்லை போலீஸ் விசாரணையில் ஐகோர்ட் அதிருப்தி
ADDED : செப் 13, 2024 06:14 AM
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி., முகாமில் பங்கேற்ற மாணவியருக்கு, என்.சி.சி., பயிற்றுனரான காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சிவராமன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது.
அதையடுத்து, பள்ளி முதல்வர் சதீஷ்குமார், சிவராமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி, போலியாக என்.சி.சி., முகாம் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இவ்வழக்கை விசாரிக்க, சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
கைதான சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார். சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதிகள், அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுத்ததாகவும், முகாமில் இருந்த சிவராமனிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும், நடந்ததை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அறிக்கையில் கூறியிருப்பதாக முதல் அமர்வு தெரிவித்தது.
நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த போலீஸ் அதிகாரியிடம், 'சிவராமனை பள்ளி நிர்வாகத்துக்கு அறிமுகம் செய்த புவன் என்பவருக்கு எதிராக, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அந்த அதிகாரி, விசாரணை நடப்பதாக தெரிவித்தார்.
'சம்பவம் நடந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? போலீஸ் விசாரணை முறையாக இல்லை' என, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். உடனே அந்த அதிகாரி, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''என்.சி.சி., முகாம் நடத்த பள்ளிகளை, சிவராமன் தான் அணுகி உள்ளார். போலி முகாம் நடத்திய மற்ற பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிக்கு தனி அதிகாரியை நியமிப்பதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்,'' என்றார்.
இதையடுத்து, விசாரணையை வரும் 19க்கு முதல் அமர்வு தள்ளி வைத்தது.