கால்நடைகளை பலியிட தடை கோரி மனு தலைமை ஹாஜிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
கால்நடைகளை பலியிட தடை கோரி மனு தலைமை ஹாஜிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ADDED : ஆக 24, 2024 01:51 AM
மதுரை:பக்ரீத் பண்டிகையையொட்டி அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை கோரிய வழக்கில், தமிழக அரசின் தலைமை ஹாஜிக்கு, நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தனிநபர்களால் கால்நடைகள் சட்டவிரோதமாக பலியிடப்படுவதை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதை தடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன், அந்த மனு விசாரணைக்கு வந்தது.
ரங்கராஜன் நரசிம்மன், 'திருச்சி மட்டுமன்றி, தமிழகம் முழுதும் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என திருத்த மனு செய்தார்.
இதை நீதிபதிகள் அனுமதித்தனர்.
நீதிபதிகள்: இவ்வழக்கில் தமிழக அரசின் தலைமை ஹாஜியை இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து, எதிர்மனுதாரராக இணைத்துக் கொள்கிறது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க, விசாரணை செப்., 23க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.