ஓடையில் பஞ்சாயத்து தலைவி வீடு கலெக்டருக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
ஓடையில் பஞ்சாயத்து தலைவி வீடு கலெக்டருக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
ADDED : மே 04, 2024 10:09 PM
சென்னை:ஓடை புறம்போக்கு நிலத்தை, பஞ்சாயத்து தலைவி ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், வேலுார் கலெக்டர் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
வேலுார், சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:
வேலுார் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக, பாலாறு உள்ளது. அணைக்கட்டு தாலுகாவில் பள்ளிகொண்டா கிராமத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட கால்வாய்கள் உள்ளன.
இவற்றில் வரும் மழை நீர், அய்யாவு நகர் வழியாக அருகில் உள்ள ஏரியிலும், பாலாறிலும் சேர்கிறது. அய்யாவு நகரில் தண்ணீர் செல்லும் பாதையில், பள்ளிகொண்டா பஞ்சாயத்து தலைவி சுபபிரியா, அவரது கணவர் குமரன் வீடு கட்டி உள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பால், மழைக் காலத்தில் கிராமத்தை சுற்றி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. தண்ணீர் வழிதடத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சில பகுதியை, அதிகார துஷ்பிரயோகம் செய்து விற்றுள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், ஓடை புறம்போக்கு நிலத்தை மீட்கவும் கோரி, வேலுார் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, என் மனுவை பரிசீலிக்கவும், ஓடை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானத்தை அகற்றவும், கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.சக்திவேல் ஆஜரானார்.
வேலுார் கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் சார்பில் பதில் அளிக்க, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், அரசு வழக்கறிஞர் கார்த்திக் ஜெகநாத், 'நோட்டீஸ்' பெற்று கொண்டனர்.
பள்ளிகொண்டா பஞ்சாயத்து தலைவி சுபபிரியா அவரது கணவர் குமரனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை 27க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.