UPDATED : ஜூன் 16, 2024 05:03 AM
ADDED : ஜூன் 15, 2024 09:20 PM

சென்னை:மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும், மூர்க்கமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்யவும், விற்கவும், இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்து, இந்தாண்டு மார்ச் 12ல், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின்படி, வெளிநாட்டு இன நாய்களான,' பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர், ராட் வைலர்' உள்ளிட்ட நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றங்கள், மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தன. சென்னை உயர் நீதிமன்றமும், மார்ச் 29ல் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடை விதித்தது.
பின், மனித உயிருக்கு அச்சுறுத்தலாக, மூர்க்கமாக இருக்கும் நாய்களுக்கு தடை விதிப்பதற்காக, அவற்றை வகைப்படுத்துவது குறித்து, பொதுமக்களின் கருத்துகளை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை கோரியுள்ளது.
இந்நிலையில்,'பொதுமக்களிடம் கருத்து கேட்பது சட்டப்படி தவறானது; நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை அமைத்து தான் கருத்து கேட்கும் நடவடிக்கையை துவங்க வேண்டும்' என, இந்திய கென்னல் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 'சமீபத்தில் சிறுமியைக் கடித்த,' ராட் வைலர், பாக்ஸர்' நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாக்ஸர் ரக நாய் விளையாட்டுத் தனமான நாய்' என்று, தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, 'லேப்ரேடர் நாயும், சிறுமியை தாக்கியதாக செய்திகள் வெளியாகின; அதற்காக அந்த வகை நாயை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கூற முடியாது. அறிவியல் பூர்வமான ஆய்வுக்குப் பின் தான் முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, 'தடை செய்யப்பட வேண்டிய நாய்களை வகைப்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட உள்ளது. பொது மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வசதியாக, வரும் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, நாய்களின் உளவியல், அவற்றின் நடத்தைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட பின், அவை ஆக்ரோஷமானவையா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.