போலீஸ் அதிகாரிக்கு எதிரான ஆணைய உத்தரவு ஐகோர்ட் ரத்து
போலீஸ் அதிகாரிக்கு எதிரான ஆணைய உத்தரவு ஐகோர்ட் ரத்து
ADDED : மார் 27, 2024 11:38 PM
சென்னை:திருட்டு வழக்கில் கைதான வாலிபர் இறக்க காரணமாக இருந்ததாக, மதுரை போலீஸ் உதவி கமிஷனராக இருந்த வெள்ளைதுரைக்கு எதிராக, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர், 2011 டிச., 15ல், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகார் மனு:
விருதுநகர் நகராட்சியில், துப்புரவு பணியாளராக பணிபுரிகிறேன். எனக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரண்டாவது மகன் சுரேஷ், அவரது நண்பர் டேவிட் ஆகியோர், 2011 டிச., 2ல் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட முயன்றபோது, அதை பார்த்த பொது மக்கள் இருவரையும் பிடித்து தாக்கி, கரிமேடு போலீசில் ஒப்படைத்ததாகவும், தாக்குதலில் சுரேஷ் இறந்ததாகவும், போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் தான் மகன் சுரேஷ் உயிரிழந்தார். எனவே, மகன் இறப்புக்கு காரணமான உதவி கமிஷனர் வெள்ளைதுரை, திலகர் திடல் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், கரிமேடு எஸ்.ஐ., சீனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
புகாரை விசாரித்த ஆணையம், 'போலீசார் தாக்கியதில் தான் மரணம் நிகழ்ந்துள்ளது நிரூபணமாகி உள்ளது. முனியாண்டி குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயை, தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.
'அந்த தொகையை, அப்போது உதவி கமிஷனராக இருந்த வெள்ளைதுரை, இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோரிடம் இருந்து, தலா 2.50 லட்சம் வீதம் வசூலிக்க வேண்டும்.
இருவர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, வெள்ளத்துரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, சுரேஷின் இறப்புக்கு, மனுதாரர் தான் காரணம் என, எந்த புகாரும் இல்லை என்பதால், 2019 ஜூன் 4ல் மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.