குற்றாலநாதசுவாமி கோவிலுக்குகுத்தகை பாக்கி தொகை நிலுவை? * விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
குற்றாலநாதசுவாமி கோவிலுக்குகுத்தகை பாக்கி தொகை நிலுவை? * விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : ஆக 07, 2024 01:38 AM
மதுரை,:தென்காசி மாவட்டம், குற்றாலம், குற்றாலநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு, குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா, குத்தகை பாக்கி நிலுவையில் உள்ளதா போன்ற விபரங்களை செயல் அலுவலர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, 'குற்றாலத்தில் சீசனின் போது அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அருவிகளில் நீராடுகின்றனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அவற்றை நிறைவேற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என 2014ல் பொதுநல மனு செய்தார்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை அவ்வப்போது உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்தது. பிப்ரவரியில் விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 'அடுத்த சீசன் காலகட்டத்தில் நடைபாதைகளில் கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது' என உத்தரவிட்டது.
நேற்று இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
குற்றாலநாதசுவாமி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா, விவசாயம் செய்யப்படுகிறதா, வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதா, குத்தகை பாக்கி எவ்வளவு நிலுவையில் உள்ளது. இந்த விபரங்களை செயல் அலுவலர் 2 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டது.