ADDED : ஆக 28, 2024 12:05 AM

சென்னை : தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் அனைத்து சேவைகளை பெறவும், ஆன்லைன் வழியே கடன் பெறவும், 'கூட்டுறவு' மொபைல் செயலியை நேற்று, சென்னையில் உள்ள, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், அமைச்சர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்.
பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில், 'கூகுள் பிளே ஸ்டோர்' வாயிலாக, 'kooturavu' மொபைல் செயலியை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பொருளாதார வளர்ச்சி
அதில், 'கடன் விண்ணப்பம்' என்ற குறியீடை தேர்வு செய்து, கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கடன் பெற சமர்ப்பிக்கலாம்.
சங்க உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும், கடன் பெற விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் அல்லாதோர் விண்ணப்பித்தால், சங்க செயலர் அவரை தொடர்பு கொண்டு, உறுப்பினராக்கப்பட்ட பின் கடன் அனுமதிக்கப்படும்.
புதிய உறுப்பினராக விரும்புவோர், சம்பந்தப்பட்ட சங்க விவகார எல்லைக்குள், நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது அங்கு வசிப்பவராக இருக்க வேண்டும்.
கூட்டுறவு இணையதளம் மற்றும் மொபைல் செயலி ஆகியவற்றின் வழியே, எங்கிருந்தபடியும் கடன் பெற விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் அனைத்து சேவைகளையும், மொபைல் செயலி வழியே பெற முடியும்.
மொபைல் செயலியை துவக்கி வைத்த பின், அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டி:
கடந்த ஆண்டு கூட்டுறவு துறை சார்பில், 44 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.
நடப்பாண்டு அறிவிக்கப்பட்ட, 43 அறிவிப்புகளில், 20க்கு அரசாணை வழங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 23 அறிவிப்புகளை, செயல்படுத்த பணிகள் நடந்து வருகின்றன.
நலிந்த பிரிவினருக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் துறையாக, கூட்டுறவுத்துறை செயல்படுகிறது. நடப்பாண்டு விவசாயிகளுக்கு, 16,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவீன மயம்
கூட்டுறவு மொபைல் செயலி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் வழியே அனைத்து கூட்டுறவு சேவைகளையும் பெறலாம்.
முதல்வரின் பல்வேறு திட்டங்களின் வழியாக, 8.19 லட்சம் புதிய கணக்குகள், கூட்டுறவு சங்க வங்கிகளில் துவக்கப்பட்டு உள்ளன. மொத்தம் உள்ள, 35,000 கூட்டுறவு ரேஷன் கடைகளை, நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொபைல் செயலி வழியே கடன் பெறலாம். ஆனால், நகைக்கடன் பெற நேரில் செல்ல வேண்டும். கல்விக் கடன் தற்போது, 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.