பிரதமர் மோடிக்காக கிரீடம்: கந்தசாமி கோவிலில் பூஜை
பிரதமர் மோடிக்காக கிரீடம்: கந்தசாமி கோவிலில் பூஜை
ADDED : ஜூன் 09, 2024 02:29 AM

வீரபாண்டி: தமிழக பா.ஜ., சார்பில் மாநில துணைத் தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி., ராமலிங்கம், நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் அணிந்து கொள்ள, மயிலிறகுகளால் செய்யப்பட்ட கிரீடம், மாலை மற்றும் செங்கோல் ஆகியவற்றை மூலவர் கந்தசாமி முன் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில், பா.ஜ., சார்பில் அவருக்கு வழங்குவதற்காக மயிலிறகுகளால் செய்யப்பட்ட கிரீடம், செங்கோல், மாலை ஆகியவற்றை மூலவர் கந்தசாமி முன் வைத்து, பூஜை செய்து எடுத்து சென்று அவரிடம் நேரில் வழங்க உள்ளோம்.
நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற, காளிப்பட்டி கந்தசாமி அவருக்கு தேவையான ஆற்றலை வழங்குவார். தேசத்தை வழி நடத்துவதில் அவருக்கு இணையாக, ஒரு பிரதமர் இனி வருவது சாத்தியமில்லை. வரும் ஐந்து ஆண்டுகள் அற்புதமான ஆட்சியை வழங்கி, முழுமையான நல்லாட்சியை தருவார்.
இவ்வாறு கூறினார்.