ADDED : மார் 01, 2025 06:03 AM

சென்னை: அரசு மருத்துவமனைகளில், 1,300 யோகா பயிற்றுநர்களை நியமிக்க, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் எம்.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
உடல் மற்றும் மனதிற்கு பல்வேறு நன்மைகளை யோகா பயிற்சி தருகிறது. குறிப்பாக, உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை, ஆற்றல் அளவு அதிகரிப்பதுடன், மன அமைதியும் மேம்படுகிறது. தினமும் யோகா பயிற்சி செய்வது, பல்வேறு நோய்களுக்கு தீர்வாக இருப்பதுடன், உடல் புத்துயிர் பெறவும் உதவுகிறது.
எனவே, அனைத்து தரப்பு மக்களும் யோகா பயிற்சி மேற்கொள்ளும் வகையில், அரசு மருத்துவமனைகளில், அனைத்து ஆயுஷ் தேசிய நல்வாழ்வு மையங்களில், 650 இருபாலர் யோகா பயிற்றுநர்கள் மற்றும் 650 பெண் யோகா பயிற்றுநர்கள் என, 1,300 பேரை நியமிக்க முடிவாகி உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், யோகா பயிற்றுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். பகுதிநேர அடிப்படையில் நியமிக்கப்படுவதால், ஒரு மணி நேரத்திற்கு, 250 ரூபாய் வீதம் மாதத்திற்கு, 32 வகுப்புகளுக்கு, 8,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
இதில், 20 வகுப்புகள் மருத்துவமனைகளிலும், 12ஐ வகுப்புகள் பள்ளிகள், முகாம்களிலும் நடத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் மட்டும் வகுப்புகள் நடத்துபவர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.