ADDED : ஏப் 23, 2024 11:41 PM
சென்னை:'பொய் வழக்கு தொடுத்து, எங்கள் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று தி.மு.க., பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த கோமதி, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்காத காரணத்தால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பதிவிட்டதற்கு, என் மீது போலீசாரை ஏவி விட்டு, பாசிச தி.மு.க., அரசு வழக்கு பதிவு செய்திருப்பதாக அறிகிறேன்.
பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த காரணத்திற்காக தான் கோமதி கொலை செய்யப்பட்டார் என்பதை, அவரது கணவர் ஜெயகுமார் மற்றும் சொந்தங்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். முன்விரோதம் என்பது தி.மு.க.,வின் சப்பைக்கட்டு நாடகம் என்பது இதன் வாயிலாக உறுதியாகிறது. ஊழல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பொது மக்களுக்காக நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்களுக்கு, என் மீது பல வழக்குகள் தொடுத்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினே, என் மீது இரு வழக்குகள் தொடுத்துள்ளார். இவ்வாறு, பொய்யான வழக்குகள் தொடுத்து, எங்கள் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று தி.மு.க., பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. தி.மு.க.,வின் பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

