கார் பந்தய பாதுகாப்பில் இருந்த கொளத்துார் உதவி கமிஷனர் இறப்பு
கார் பந்தய பாதுகாப்பில் இருந்த கொளத்துார் உதவி கமிஷனர் இறப்பு
ADDED : செப் 01, 2024 01:23 AM

சென்னை: சென்னை அம்பத்துார், ஒரகடத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 53; கொளத்துார் சரக காவல் நிலைய உதவி கமிஷனர். சென்னையில் நேற்று நடந்த பார்முலா - 4 கார் பந்தயத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
பணியில் ஈடுபட்டிருந்த அவர், மதியம் 12:45 மணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு விழுந்தார்.
உடனடியாக, '108' ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தும், கார் பந்தயத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்ததால், ஆம்புலன்ஸ் வருவதற்கு, ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. இதையடுத்து, அவ்வாகனத்தின் வாயிலாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிவகுமார் சேர்க்கப்பட்டார்.
மதியம் வரை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், மாலை 4:00 மணிக்கு மேல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறினர். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் பாதுகாப்பு பணியின்போது இறந்த, காவல் துறை உதவி கமிஷனர் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.