ADDED : மார் 03, 2025 07:07 AM
சென்னை : 'கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின், சென்னை மாநகர தலைவர் ரவிராஜ், பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
நான் சூளையில், 'கிங் வுட்' என்ற பெயரில் கடை நடத்தி வருகிறேன். தொழிலை விரிவுப்படுத்த, என் நண்பரான, ஆந்திர மாநிலம், தடா பகுதியைச் சேர்ந்த பழனியிடம், 15 லட்சம் ரூபாயை மூன்று தவணைகளாக 2020ல் கடன் வாங்கினேன்.
அதற்கு, 100 ரூபாய்க்கு 2 பைசா வீதம் வட்டி செலுத்தி வந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக, என்னால் கடையை திறக்க முடியவில்லை.
எனினும், முடிந்த அளவுக்கு வட்டி செலுத்தி வந்தேன். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், பழனியை நேரில் சந்தித்து, என்னால் இனி வட்டி தர முடியாது.
கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள். நான் அசல் தொகையை திரும்ப ஒப்படைத்து விடுகிறேன் என்றேன்; அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. என் மீது, ஆந்திர மாநிலத்தில் புகார் அளித்தார். பணம் கொடுக்கல் - வாங்கல் புகார் என்பதால், நீதிமன்றம் சென்று சரிசெய்து கொள்ளுமாறு போலீசார் கூறிவிட்டனர்.
இந்நிலையில், பழனியின் துாண்டுதலின்பேரில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சந்துரு என்பவர் ஆட்களை அழைத்து வந்து, 'இவர்கள் யார் தெரியுமா; ஒவ்வொருவர் மீதும் கொலை வழக்குகள் உள்ளன.
பணத்தை கொடுக்காவிட்டால், உன்னையும், உன் மகனையும் கொன்று விடுவோம்' என, மிரட்டுகிறார். சந்துரு மற்றும் அவர்களுடன் வந்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.